ராஜித்தவின் வருகை ரணிலின் வெற்றி நிச்சயமாகியுள்ளது – ஐக்கிய தேசிய கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவின் வருகையின் மூலம் ரணில் விக்ரமசிங்க வெல்லப்போவது உறுதியாகியுள்ளது. 42 கட்சிகள் இணைந்த பாரிய கூட்டணியை நாங்கள் அமைப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஷல ஜாகொட தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்காக தற்போது எம்முடன் இணைந்துகொண்டுள்ளார்.

பொதுவாக அரசியலில் பேசப்படும் விடயம்தான், ராஜித்த எந்த பக்கம் செல்கிறாராே அந்த பக்கம் வெற்றிபெறும் என்பதாகும். அதனால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என்பதை தற்போது உணர்ந்துகொள்ள முடியும்.

அத்துடன் தேர்தலை இலக்காகக்கொண்டு தற்போது பல்வேறு கூட்டணிகள் அமைவதை நாங்கள் காண்கிறோம். சஜித் பிரேமதாசவுடன் சில கட்சிகள் அண்மையில் ஒப்பந்தம் செய்து கூட்டணி அமைத்ததை நாங்கள் கண்டோம்.

ஆனால் அவர்களின் கூட்டணியில் அதிகமான கட்சிகள் அவர்களுடன் ஏற்கனவே இருக்கும் கட்சிகளாகும் புதிதிதாக எந்த கட்சியும் அவர்களுடன் இணையவில்லை.

மக்களை ஏமாற்றும் நோக்கிலே அவ்வாறு செயற்பட்டனர். தற்போது சம்பிக்க ரணவக்கவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளார். சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியிலேயே பாராளுமன்றத்துக்கு வந்தார்.

அதனால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்திருக்கும் பெரும்பாலான கட்சிகள் அவர்களுன் இருக்கும் கட்சிகளாகும். இதனால் அவர்களுக்கு புதிதாக வாக்குகள் அதிகரிக்கப்போவதில்லை.

அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கும் கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டணி ஒன்றை அமைக்க இருக்கிறோம். இந்த கூட்டணியில் 42 கட்சிகள் இருக்கின்றன. 68 அமைப்புகள் இருக்கின்றன.

அந்த கூட்டணியில் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதேபோன்று தமிழ். முஸ்லிம் கட்சிகள் இந்த கூட்டணியில் இருக்கின்றன. இலங்கையில் இருக்கும் பாரியதொரு கூட்டணியை அமைப்பதே எமது நோக்கமாகும்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் 90வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றனர். இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்ஷ்வை வேட்பாளராக நியமித்திருப்பது, ஜனாதிபதியின் வாக்குகளை சிதரடிப்பதற்காகும்.

இதன் மூலம் சஜித் பிரேமதாசவுக்கு நன்மை பயப்பதே இவர்களின் நோக்கமாகும். நாட்டில் இடம்பெற்ற கலவரத்தின்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களை பாதுகாத்தது ரணில் விக்ரமசிங்கவாகும்.

அதற்கு நன்றி செலுத்தும் நோக்கிலேயே இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *