நாட்டை வீழ்ச்சியடையச்செய்த மொட்டு கட்சிக் காரர்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே ரணில் விக்ரமசிங்க நினைத்தார். ஆனால் தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டு கட்சியில் போட்டியிடுவதால், அவருக்கு வெற்றிபெறுவது நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். ரணில் விக்ரமசிங்க இத்துப்போன காஸ் சிலிண்டர். அதில் காஸ் நிரப்ப முற்பட்டால் வெடித்து சிதறிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது தற்பாேது கட்சியின் யானை சின்னம் இல்லை. காஸ் டாங்கியே இருக்கிறது.
அந்த காஸ் டாங்கி இத்துப்போனதாகும். அதனால் அதில் ஒரு மாதத்துக்கு மேல் காஸ் நிரப்ப முடியாது. அதில் காஸ் நிரப்ப முற்பட்டால் அது வெடித்து சிதறிவிடும்.
ரணில் விக்ரமசிங்கவை விற்பனை செய்ய நாங்கள் 30 வருடங்களாக முயற்சித்தோம். ஆனால் எங்களால் அவரை விற்பனை செய்ய முடியாமல் போனது.ரணில் விக்ரமசிங்க என்பவர் தற்போது காலாவதியான ஒரு பொருள். அதனை நாங்கள் தெரிந்துகொண்டதால்தான், சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி மக்கள் முன்வர நேர்ந்தது.
ரணில் விக்ரமசிங்க தற்போது மக்களால் வெறுக்கப்பட்ட, மக்கள் நிராகரித்த குழுவை கொண்டுவர முயற்சிக்கிறார். மொட்டு கட்சியை பிளவுபடுத்தி, அதில் இருந்து ஒரு குழுவை தன் பக்கம் ரணில் விக்ரமசிங்க இழுத்துக்கொண்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, நாட்டை வீழ்ச்சியடையச்செய்த மொட்டு கட்சி காரர்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றே ரணில் விக்ரமசிங்க நினைத்தார்.
ஆனால் தற்போது நாமல் ராஜபக்ஷ் மொட்டு கட்சியில் போட்டியிடுவதால், அவருக்கு வெற்றுபெறுவது நம்பிக்கை இல்லை. அதனால் ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களை பணத்துக்கும் வேறு வரப்பிரசாதங்களையும் வழங்கி தன்பக்கம் இழுத்துக்கொண்டாலும் மக்கள் சஜித் பிரேமதாசவுடனே இருக்கின்றனர் என்பதை ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளில் இருந்தும் உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கி தற்போது சாம்பார் கூட்டணி ஒன்றை அமைத்திருக்கிறார். அந்த கூட்டணியில் மோசடி காரர்கள், தரமற்ற மருந்து கொள்வனவு செய்தவர்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கப்பம் கேட்டவர்கள்.
வெள்ளைப்பூண்டு மோசடி செய்தவர்கள், தங்கம் கடத்தியவர் என அனைத்து தரப்பினரும் இருக்கின்றனர்.செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இவர்கள் அனைவரையும் சட்டத்துக்கு முன் நிறுத்துவோம். இவர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.
ஆனால் இவர்கள்தான் நாட்டை வீழ்ச்சியடையச் செய்தவர்கள். அதனால் நாட்டை கட்டியெழுப்ப முடியுமான அணி இருப்பது சஜித் பிரேமதாசவுடனாகும்.
எமது அணிக்கே நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும். அதனால் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய மக்கள் அணிதிரள வேண்டும் என்றார்.
– எம்.ஆர்.எம்.வசீம்