ராஜபக்ஷ்வினருடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியையும் ஆதரவாளர்களையும் அழித்துவந்தார். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை பூச்சியத்துக்கு இறக்கினோம்.
செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர், மீண்டும் நாட்டை அபிவிருத்தி செய்த லலித், காமினி, ரணசிங்க பிரேமதாச யுகத்தை உருவாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
மாவனெல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க 30 வருடங்களாக கட்சியின் தலைமை பதவியில் இருந்துகொண்டு, கட்சியில் இருந்த திறமையான, ஆளுமைமிக்கவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் ராஜபக்ஷ்வினருடன் டீல் போட்டுக்கொண்டு கட்சியை அழித்துக்கொண்டு எங்களையும் மிதித்துக்கொண்டிருந்தார்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே நாங்கள் கிழர்ந்தெழுந்தோம். கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை பூச்சியத்துக்கு இறக்கி, சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர், மீண்டும் லலித் அதுலத் முதலி, காமினி திஸாநாயக்க, ரணசிங்க பிரேமதாச யுகத்தை உருவாக்குவோம் என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறேன்.
மேலும் இந்த நாட்டை அழித்த 4 சக்திகள் இருக்கின்றன. முதலாவது விடுதலை புலிகள். அவர்கள் இந்த நாட்டின் சொத்துக்கள் உயிர்கள் என 250 பில்லியன் டொலர் வரை அழடித்தார்கள். அடுத்தபடியாக மக்கள் விடுதலை முன்னணி, நாட்டின் வளங்கள் உயிர்கள் என 200 பில்லியன் டொலர்வரை அழித்தார்கள்.
பல்கலைக்கழகங்கள் 4 வருடங்கள் மூடிவைக்கப்பட்டிருந்தன. அடுத்ததாக ராஜபக்ஷ் குடும்பம். நாட்டை வங்குராேத்தாக்கினார்கள்.
ஆசியாவில் இருக்கும் செல்வந்த குடும்பமாக ராஜபக்ஷ் குடும்பம் மாறும்போது, ஆசியாவில் இருக்கும் வறுமை நாடாக இலங்கையை மாற்றியமைக்க ராஜபக்ஷ் குடும்பத்துக்கு முடியுமாகியது. அதற்கு ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவும் பாதுகாப்பும் அவர்களுக்கு கிடைத்தது.
இவ்வாறு நாட்டை அழித்த 4 சக்திகளில் 3 பிரிவினர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அவரையும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தேர்தலில் போட்டியிட கொண்டுவந்திருப்பார்.
30 வருடங்களுக்கும் அதிக காலம் கட்சியில் இருந்தும் தேர்தல் மூலம் அவரால் வெற்றிபெற முடியுாமல் போனது. அவர் எங்களையும் இல்லாமலாக்கி, கட்சியையும் இல்லாமலாக்கினார்.
இந்த தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள கணிப்பீடுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கு நூற்றுக்கு 46 வீதம் இருக்கிறது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு நூற்றுக்கு 29வீதம். ரணில் விக்ரமசிங்கவுக்கு நூற்றுக்கு 18 வீதம் நாமல் ராஜபக்ஷ்வுக்கு நூற்றுக்கு 8வீதம் இருக்கிறது. அதனால் எமக்கு இன்னும் 4வீதமே தேவைப்படுகிறது.
எமது நாடு 100 பில்லியன் டொலர் கடன். இந்த 100 பில்லியன் டொலரை செலுத்துவது இலகுவான விடயம் என அனுரகுமார தெரிவிக்கிறார். இது கடினமான காரியம்.என்றாலும் அந்த கடனை நாங்கள் அடைப்போம்.
அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி முடியுமானவரை கடன்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வியாபாரிகளுக்கு இலகுவான முறையில் கடன் வசதிகளை செய்துகொடுப்போம்.
அதனால் வியாபாரிகள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்