வெளிநாட்டு நிதியுதவி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சமிக்ஞை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தின் போது கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நிதியுதவி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சமிக்ஞையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த உதவிகளை மேலும் பெற்றுக்கொள்ளும் வகையில் சமகால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் கடும் வறட்சி நிலவுகிறது. அரசாங்கம் இது விடயத்தில் கவனம் செலுத்துவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

இயற்கை அனர்த்தம் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் அரசாங்க முறைமையானது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் இம்முறையை மாற்றுவதற்கான காலம் தோன்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தற்போதைய நிர்வாகம் முழுவதும் கொழும்பை மையப்படுத்தியதாகக் காணப்படுகிறது. இதனால் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஊழல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித்தலைவர் மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போதான துரித செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என்றும் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரே மாதிரியான அரசாங்க முறைமையே காணப்படுகிறது. இதனால் நாட்டில் எந்தவொரு பாரிய மாற்றங்களையும் காண முடியாதுள்ளது. ஏனைய உலக நாடுகள் மாறுபட்ட முறைமைகைளை கடைப்பிடித்து முன்னேறிச் சென்றுள்ளன.

இயற்கை அனர்த்தம் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்கள் போன்ற அண்மைக்கால சம்பவங்களை எடுத்துப்பார்த்தால் நிர்வாக அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியதன் அவசியம் நன்கு புலனாகிறது. அரசாங்க முறைமையில் வெளிப்படைத்தன்மை தேவை என்பது இதனூடாகத் தெளிவாகிறது.10அதிகாரங்களை மத்தியில் வைத்துக்கொண்டு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *