பரபரப்பான சூழலில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்

(UTV|INDIA)-11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.

இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 ஆண்டு தடைக்கு பிறகு களம் திரும்பி இருக்கும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

வெய்ன் பிராவோவின் அதிரடி ஆட்டம் (68 ரன்கள்) சென்னை அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்து வெற்றிக்கு திருப்பியது. அவருக்கு அனுகூலமாக இருந்த கேதர் ஜாதவ் ஆட்டம் இழக்காமல் 24 ரன்கள் சேர்த்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சாய்த்து தனது வலிமையை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரின் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் அரை சதத்தை அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இரு அணிகளிலும் தலைசிறந்த வீரர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள். இரு அணிகளும் 2-வது வெற்றியை ருசிக்க தீவிரம் காட்டுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 10 முறையும், கொல்கத்தா அணி 6 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பிக்க முனைப்பு காட்டும். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும் சென்னை அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

கடந்த லீக் ஆட்டத்தில் காயம் அடைந்த கேதர் ஜாதவ் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி நேற்று அறிவித்தார். அவருக்கு பதிலாக யார்? களம் இறங்குவார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். பாப் டுபிளிஸ்சிஸ், எம்.விஜய் ஆகியோர் காயத்துடன் இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை அணி வீரர்கள் கருப்பு பட்டை (கருப்பு பேட்ஜ்) அணிந்து விளையாடும் திட்டம் உள்ளதா? என்று கேட்டதற்கு, ஐ.பி.எல். போட்டியில் அப்படி விளையாட விதிமுறை இருப்பதாக தெரியவில்லை. இது குறித்து அணி நிர்வாகம் தான் பதிலளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை அணி வீரர்கள் நேற்று மாலை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கொல்கத்தா அணியினர் நேற்று மாலை தான் சென்னை வந்து சேர்ந்ததால் அவர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. சென்னை அணியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அல்லது துருவ் ஷோரேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை அணி போட்டிக்கு திரும்பி இருப்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் கடும் ஆவலாக உள்ளனர். இதனால் இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்த்து விட்டன.

பரபரப்பான சூழலில், இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ்ரெய்னா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், மார்க்வுட், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர் அல்லது துருவ் ஷோரே.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரின், கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், வினய்குமார், பியுஷ் சாவ்லா, மிட்செல் ஜான்சன், குல்தீப் யாதவ்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *