சிரியாவில் விமானப்படை தளம் மீது ஏவுகணை தாக்குதல்

(UTV|SYRIA)-சிரியாவில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. இதில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷிய ராணுவமும் மற்றும் ஈரானைச் சேர்ந்த ஹெஸ்பெல்லா என்ற குழுவும் உதவி வருகின்றன.

அதேநேரம் சிரியாவில் பதுங்கியிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க படைகளும் அவ்வப்போது வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில் ரசாயன குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி பரிதாபமாக பலியாயினர். ஏராளமான குழந்தைகள் மயங்கி விழுந்து பாதிப்புக்கு உள்ளாயினர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வன்மையாக கண்டித்தார். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அதற்குரிய மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதை ஆதரித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அப்பாவிகள் மீது ரசாயன குண்டு வீச்சு நடத்தப்பட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் அருகேயுள்ள ஹோம்ஸ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அரசு படைகளுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வரும் ஈரானியர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் ரசாயன குண்டு வீச்சுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி என்று கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என்று சிரியாவின் செய்தி நிறுவனமான ‘சானா’ குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்தது. இதுபற்றி அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கிறிஸ்டோபர் ஷெர்வுட் கூறுகையில், சிரியாவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் எங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்றார்.

சிரியாவில் ரசாயன குண்டு வீச்சு நடத்தப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ரஷியாவும் அவசர அழைப்பு விடுத்தன. இதை ஐ.நா.வும் ஏற்றுக்கொண்டு உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *