உய்குர் முஸ்லிம்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் சீன அரசு

(UTV | கொழும்பு) – சீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களுக்கு கருத்தடை சாதனங்கள் பொறுத்தப்படுகின்றன என அந்நாட்டில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

சீனா தொடர்பான வல்லுநர் அட்ரியன் ஜென்ஸ் எழுதி வெளியிட்ட குறித்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என சர்வதேச அழுத்தம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், இந்த அறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா அதனை மறுக்கிறது

ஏற்கனவே உய்குர் முஸ்லிம்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதற்காக சீனா பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

மறுகல்வி முகாம்கள் என்று அரசு அழைக்கிற இந்த முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 இலட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டதையே சீனா மறுத்தது. ஆனால் ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக பிறகு ஒப்புக் கொண்டிருந்தது.

இவ்வாறான கொடூர நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

”மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து நிற்க வேண்டும்” என்றும் மைக் பாம்பேயோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு பிபிசி நடத்திய ஆய்வில், ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது. முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து பிரித்து குழந்தைகளை வளர்ப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் சீனாவில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

ஜென்ஸ் இனது அறிக்கை :

அதிகாரபூர்வமாக உள்ளூரில் கிடைத்த தரவுகள் மற்றும் கொள்கை ஆவணங்களை அடிப்படையாக கொண்டே ஜென்ஸ் தனது அறிக்கையைத் தயாரித்துள்ளார். ஜின்ஜியாங்கில் உள்ள சிறுபான்மை இன பெண்களிடம் நேரடியாக பேசியும் சில தரவுகள் பெறப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தை பெற அரசாங்கம் விதிகளை அறிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மீறும் வகையில் பெண்கள் யாரேனும் கருவுற்றால், அவர்கள் கருவிலேயே குழந்தையை கொல்ல வற்புறுத்தப்படுகிறார்கள். கருவை கலைக்க மறுத்தால் அச்சுறுத்தப்படுவதாக முகாம்களில் உள்ள சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களும் உய்குர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த பெண்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, கருவுற்ற பெண்கள் கருத்தடை செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் உய்குர் முஸ்லிம் பெண்கள் கூறுகின்றனர்.

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீன அதிகாரிகளின் தலையீடு அதிகமாக இருப்பதை பல சாட்சியங்கள் உணர்த்துகின்றன. 2016ம் ஆண்டுக்கு பிறகு ஜின்ஜியாங்கில் காவல் துறையினரின் ஒடுக்குமுறையும் அதிகரித்திருந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சமீப ஆண்டுகளில் ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையிலேயே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுக்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இரு பகுதிகளின் மக்கள் தொகை வளர்ச்சியில் 84% சரிவு காணப்படுகிறது என அட்ரியன் சேகரித்த தரவுகள் காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *