(UTV | கொழும்பு) – இரண்டு வருட காலம் இந்த வைரசுடன் வாழும் நிலையை உலக மக்கள் எதிர்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றாவது கொரோனா வைரசு அலை அடுத்த வருடம் உருவாகும் என்று ஆய்வுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது வைரசு அலை முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளிலும் பார்க்க மிக பயங்கரமானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிடார்.
மூன்றாவது கொரோனா அலை உருவாகும் சூழலில் 55 துறைசார் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள் அடங்கிய கோவையை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆடைத்தொழிற்துறை, போக்குவரத்து, வாடகை போக்குவரத்து சேவை, வருமானமீட்டும் சேவைகள், அரச அலுவலகங்கள், தனியார் சேவைகள், பல்பொருள் அங்காடிகள், கடைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், ஆடை விற்பனை நிலையங்கள், விவசாயம், பொருளாதார மத்திய நிலையங்கள், பேக்கரி, வீதியோர விற்பனை கூடங்கள், நடமாடும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்காக இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைத் தொகுதிகளில் ஏற்பாடுகளை செய்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.
கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் வகுப்புகள், உள்ளக நிகழ்வுகள், திறந்தவெளி நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திரையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள், விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், கரையோர விருந்துகள், நீர் தடாகங்கள், சூதாட்ட நிலையங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், மசாஜ் நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.