சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் : டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்

(UTV | தெஹ்ரான்) – படைத் தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என ஈரான் வெளிப்படையாகவே டிரம்பிற்கு மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்கர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுலைமானி செயல்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் இராணுவமும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டுத் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் டிரம்பை போல இருக்கும் ஒருவர் கோல்ஃப் விளையாடுகிறார். அந்த நபர் டிரோன் விமானம் மூலம் குறிவைக்கப்படுவது போல உள்ளது. மேலும், அதில் நிச்சயம் பழிவாங்கப்படும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ள இந்த ட்வீட்டுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சுலைமானி கொல்லப்பட்டதற்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அரசு தொடர்ந்து கூறிவருகிறது. முன்னதாக, கடந்த டிரம்பர் 16ஆம் திகதி அலி கமேனியின் ட்விட்டரில், “தளபதி சுலைமானியைக் கொலை செய்ய உத்தரவிட்டவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்கும் தக்க தண்டனை வழங்கப்படும். இந்த பழிவாங்கல் நிச்சயம் சரியான நேரத்தில் நடக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் தடுப்பூசிகளை நம்ப முடியாது என்றும் அவை பிற நாடுகளைப் பாதிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அலி கமேனி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால், இவை கொரோனா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் இருப்பதாகக் கூறி, ட்விட்டர் இந்த ட்வீட்களை நீக்கின.

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2016ஆம் ஆண்டு பதவியேற்ற போது இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஈரான் நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் அரசு விதித்தது. இதனால் ஈரான் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள பைடன், ஈரான் நாட்டுடன் மீண்டும் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *