(UTV | கொழும்பு) – கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பூரண ஆதரவினை வழங்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் கர்தினாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அங்கீகரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கர்தினால் உள்ளிட்ட தரப்பினர் மேற்கொள்ளும் இந்த கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி பீடம் ஏறும் கருவியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டதாகவும் மெய்யாகவே பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.