இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் காட்டிய டில்ஷான்

(UTV | ராஜ்பூர்) – இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் திலகரத்ன டில்சாஷின் சகலவிதமான பங்களிப்புடன் இலங்கை அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் களம் காணும் வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு 20 ஷம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இதில் நேற்றிரவு ராஜ்பூர் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியினரும், திலகரத்ன டில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட் அணியினரும் மோதினர்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் மூன்று ஓட்டங்களுக்குள் வீழ்த்தினார் திலகரத்ன டில்சான்.

தொடர்ந்தும் இங்கிலாந்து அணி வீரர்கள் இலங்கை அணியினரின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி சார்பில் ஜிம் ட்ராட்டன் 18 ஓட்டங்களையும், கிறிஸ் ட்ரெம்லெட் 22 ஓட்டங்களையும் பெற, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடனும் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்ஷான் 4 விக்கெட்டுகளையும், ரங்கன ஹெரத் 2 விக்கெட்டுகளையும், கெளசல்ய வீரரத்ன, ரஸல் ஆர்னோல்ட் மற்றும் மஹாரூப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

79 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியானது 7.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை கடந்தது.

கெளசல்ய வீரரத்ன ஒரு ஓட்டத்துடனும், உபுல் தரங்க 6 ஓட்டங்களுடனும், சிந்தக ஜெயசிங்க டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க அணித் தலைவர் திலகரத்ன டில்ஷான் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களுடனும், ரஸல் ஆர்னோல்ட் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 61 ஓட்டங்களையும், 4 ஓவர்களுக்கு பந்து பரிமாற்றம் மேற்கொண்டு 6 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை சாய்த்த திலகரத்ன டில்ஷான் தெரிவானார்.

முன்னதாகவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இலங்கை லெஜண்ட்ஸ் அணியானது இந்த வெற்றியுடன் 20 புள்ளிகளை பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *