(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெறவுள்ளது.
தேரங்கல மகா வித்தியாலத்தில் காலை பத்து மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகும். இதில் மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், மற்றும் அதிகாரிகளும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். தென் மாகாணத்தில் இடம்பெறும் இரண்டாவது கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டம் இதுவாகும்.
கிராம மட்டத்திற்கு சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு முன்வைக்கும் நோக்கில் கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலநறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகல், காலி, நுவரெலியா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் கிராமத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டன.