சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

(UTV | கொழும்பு) – தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று (01) மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது.

18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே, மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது.

அமெரிக்காவில் 1832 இல், பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள், 10 மணி நேர தொழில் கோரிக்கையை முன்வைத்து பணிநிறுத்தம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’ என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.

இந்த இயக்கம் 8 மணி நேர தொழில் கோரிக்கையை முன்வைத்து, தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.

1886ஆம் ஆண்டு மே முதலாம் திகதி நாடு தழுவிய பணி நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.

இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

1886ஆம் ஆண்டு, மே மாதம் 4 திகதி, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரண்டு, சிக்காக்கோ நகரில் போராட்டம் நடத்தினர்.

ஆயுத பலத்தினால், இந்தத் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது பெருமளவான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன், காயங்களுக்கும் உள்ளாகினர்.

1889 ஜூலை 14 அன்று பாரிசில் சோசலிச தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம்; கூடியது.

இதன்போது, 1890 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, அனைத்துலக ரீதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதுவே பின்னர் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில், 1934 ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

1956 ஆம் ஆண்டு, சர்வதேச தொழிலாளர் தினம் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *