மஹிந்தவின் தலைமையில் பங்காளிகள் கூடுகின்றனர்

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணிக் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை(04) அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

இம்முறை இடம் பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம்பெறும் அரசியல் கட்சி கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் முறைமை, ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுப்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான 10 பங்காளி கட்சி தலைவர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பிரதான தரப்பினர் பிரதமருடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.

அரசியல் கட்சி கூட்டத்தில் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அரசியல் உறுப்பினர்கள் கலந்துக் கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *