அழுத்தங்களுக்கு மத்தியில் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு பைடன் பச்சைக் கொடி

(UTV | வொஷிங்டன்) – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான மூன்றாவது தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி ஜோ பைடன் காசாவுடனான போர் நிறுத்தத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய-பலஸ்தீனிய மோதலின் எட்டாவது நாளான திங்களன்று பெஞ்சமின் நெதன்யாகுவும், ஜோ பைடனும் மூன்றாவது தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கைகள் உறுதிபடுத்தியுள்ளன.

தனது சட்டத்தரணிகள் மற்றும் சொந்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , காசா பகுதியில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போர் நிறுத்தத்திற்கான ஆதரவினை இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த உரையாடலின்போது பைடன், “அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள இஸ்ரேலை ஊக்குவித்தார்” என்றும் இரு தலைவர்களும் “ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள ஏனைய பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் முன்னேற்றம் குறித்து விவாதித்தனர்” என்றும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைய வன்முறை வெடித்ததில் இருந்து காசாவில் 61 சிறுவர்கள் உட்பட 212 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய சார்பில் இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *