வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானினால் உதவி

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டாக், 2021 ஜூன் 12 ம் திகதி பேருவளை பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு , முன்பள்ளிகள் மற்றும் தொடக்க கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா முன்னிலையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக இப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்தார்.

மேலும், உயர் ஸ்தானிகர் காலி பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொண்டு, காலி பிராந்தியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவுப் பொருட்களை விநியோகித்தார். இவ்விஜயத்தின் போது, கரிம மற்றும் இயற்கை உரங்கள் உற்பத்தி , வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் மோகன் பிரியதர்ஷன டி சில்வாவும் கலந்து கொண்டார். இலங்கையில் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக பல உயிரிழப்புக்கள் இடம் பெற்றதோடு பலர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விஜயத்தின் போது, ​​இக்கட்டான இந்நேரத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் என்றும் , இரு நட்பு நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்நிவாரண உதவிகளும், முழு ஆதரவும் தொடரும் என்றும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார். மேலும் , இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க பாகிஸ்தான் எப்போதும் உறுதியுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *