இன்று முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள்

(UTV | கொழும்பு) –  இன்று முதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டது.

தேருநர்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் என்பன இத்தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேலும் ஆராய்ந்த பின்னர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் தசநாயக்க குறிப்பிட்டார்.

ஓகஸ்ட் 03ம் திகதி சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் 2020ம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

அன்றையதினம் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும். ஓகஸ்ட் 04ஆம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

மறுநாள் 05ம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்ட இலக்கம் 14/2008 இன் கீழான கட்டளைகளும்,

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறும்.

ஓகஸ்ட் 06ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் குடிவருவோர்,

குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இரண்டாவது நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறும்.

COMMENTS

Wordpress (0)
Disqus ( )