இன்று முதல் அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட்-19 பரவல் காரணமாக அரச நிறுவனங்களுக்கு சேவையாளர்களை அழைக்கும் போது முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் இன்று(09) முதல் ஆரம்பமாகின்றன.

இது தொடர்பான சுற்றுநிருபம் கடந்த 6 ஆம் திகதி அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியினால் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுகள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள், ஆகக் குறைந்தது வாரம் ஒன்றில் 3 நாட்கள் சேவைக்கு சமுகமளிக்கும் வகையில் குழுவொன்றை நியமித்து அக்குழுவினால் தொடர்ந்து சேவைகளை வழங்கும் வகையில் கடமைக்கு அழைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சேவைக்கு அழைக்கப்படும் குழுவில் உள்ள ஊழியரால் தமக்குரிய பணி நாளில் சமுகமளிக்க முடியாதவிடத்து, அது அவரது தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நோய் அறிகுறிகளை கொண்டிருக்கும் அல்லது வேறெந்த நியாயமான காரணிகளால் கடமைக்கு சமுகமளிக்க முடியாதுள்ள ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அல்லது அருகிலுள்ள பணியிடம் ஒன்றில் கடமை புரியும் வசதிகளை அளிக்கும் தீர்மானம் நிறுவன பிரதானியால் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *