சி.ஐ.டி. பொறுப்பின் கீழ் உள்ள யானைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு

(UTV | கொழும்பு) – மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில் சி.ஐ.டி.யின் பொறுப்பின் கீழ் பின்னவலை மற்றும் வேறு யானை பராமரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 யானைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் தற்காலிகமாக இந்த 14 யானைகளைகளையும் இவ்வாறு கையளிக்க கொழும்பு மேலதிக நீதிவான் டி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன் தினம் 6 ஆம் திகதி அவர் இந்த உத்தரவை அளித்துள்ளார்.

அதன்படி இந்த 14 யானைகளைனதும் பழைய உரிமையாளர்களை அவற்றின் பாதுகாவலர்களாக பதிவு செய்யுமாறு தெரிவித்து விலங்கியல் திணைக்களத்துக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் மட்டும் தாவரங்கள் தொடர்பிலான கட்டளை சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் 2 ஆம் பிரகாரமும், 2241/21 ஆம் இலக்க ஆகஸ்ட் 19 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமனி அறிவித்தல் பிரகாரமும், குறித்த யானைகளை பதிவு செய்வதற்காக அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்புக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண முன் வைத்த கோரிக்கையை ஏற்றே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

யானை விவகாரத்தில், 47 யானைகள் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 8 யானைகள் தொடர்பிலான விவகாரத்தில் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் சி.ஐ.டி.யினர் வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

அத்துடன் உரிமையாளர்களுக்கு கையளிக்க உத்தரவிடப்பட்ட 14 யானைகள் தொடர்பிலான சம்பவம் தொடர்பில், விரைவில் தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது அத்தியாயத்தின் கீழ் விடயங்களை முன் வைக்க எதிர்ப்பர்ப்பதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு குறிப்பிட்டனர்.

முன்னதாக வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் யானைகளை பதிவு செய்யும் புத்தகத்தை மோசடியான முறையில் மாற்றி, அனுமதிப் பத்திரம் இன்றி யானைகளை வைத்திருந்ததாக கூறி சி.ஐ.டி.யினர் இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

2014 ஜூலை மாதம் முதல் 2015 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் மஹரகம, அரவ்வல, பத்தரமுல்லை மற்றும் ஒருவல பிரதேசங்களில், முறைப்பாட்டாளர் தரப்பினர் அறியாதவர்களுடன் இணைந்து களவாடப்பட்ட யானைகள் என தெரிந்தும் மோசடியான முறையில் யானை கடத்தல்களை முன்னெடுக்க சதித் திட்டம் தீட்டியமை, யானைகளை கடத்தியமை, சட்ட விரோதமாக அந்த யானைகளை வைத்திருந்தமை தொடர்பில் 8 யானைகளை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் 33 குற்றச்சாட்டின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றவியல் சட்டக் கோவை மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனும் அலி ரொஷான், வன ஜீவிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக ( சட்டம்) சேவையாற்றிய பெஸ்குவல் பொன்சேகாலாகே உபாலி பத்ம்சிறி, வன ஜீவிகள் திணைக்களத்தில் யானைப் பதிவுப் பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்ட பதிவாளர் எஸ். பிரியங்கா சஞ்ஜீவனீ, சமரப்புலி ஹேவகே உச்சித நிஷான் தம்மிக, கடுபிட்டியகே சந்தன குமார, சஷிக சானுக் கம்லத், பலிஹபிட்டிய கமகே ஜயலத், ரணசிங்கலகே தமித்த சதுரங்க, ஆகிய வன ஜீவிகள் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் உட்பட 8 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *