சூழலை பேணுவதன் முக்கியத்துவத்தை இலங்கை நன்கு உணர்ந்துள்ளது

(UTV | கொழும்பு) – மனித தேவைகளுக்கேற்ப சூழலை பேணுவதன் முக்கியத்துவத்தை இலங்கை நன்கு உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவரின் அழைப்பிற்கேற்ப காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்களின் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது அமர்வின் தலைவர் அப்துல்லா ஹாஷிலின் அழைப்பிற்கிணங்க, மனித செயற்பாடு மற்றும் சௌப்பாக்கியத்திற்கென தேசிய செயற்பாடுகளை மேம்படுத்த முன்னின்று செயற்பட்ட அரச தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் வீடியோ தொழினுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்ரெஸ் தலைமையில் கலந்துரையாடல் ஆரம்பமானது. இதில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். புத்தபெருமானின் போதனைகளுக்கமைய வளமான முன்மாதிரிமிக்க பராம்பரியத்தைக் கொண்ட இலங்கை மனித தேவைகளுக்கமைய சுற்றுச்சூழலை பேணுவதன் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாம் இருப்பது மனித வரலாற்றின் தீர்மானமிக்க காலப்பகுதியிலாகும். இதனால் காலநிலை மாற்றம் குறித்து விரைவில் அவதானம் செலுத்தி தீர்வை பெறவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *