கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV | திருகோணமலை) – திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் இன்று(24) துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அனைத்து வீடுகள், கடைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வௌ்ளை கொடிகளை பறக்கவிட்டு, அமைதியான முறையில் துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி துக்க தின அனுஷ்டிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கிண்ணியா சிவில் சமூக ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து அனைவரும் தங்களின் வீடுகளிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட பிரேர்தனைகளில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம், பள்ளிவாயில்கள் சம்மேளனம், உலமா சபை, ஷிரா சபை மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பாலம் இன்மையால் படகுப்பாதை போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் படகுப்பாதையில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கிய போது காப்பாற்றப்பட்டவர்களில் 19 பேர் தொடர்ந்தும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *