(UTV | நியூயார்க்) – அமெரிக்காவில் கடந்த வாரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேருக்கு ஒமிக்ரோன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அமெரிக்கா முழுவதையுமே ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் 6 மடங்குஅதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தென்கிழக்கு, இன்டஸ்ட்ரியல் மிட்வெஸ்ட், பசிபிக் நார்த்வெஸ்ட் ஆகிய பகுதிகளிலும் ஒமிக்ரோன் ரான் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் 6.50 லட்சம் பேருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது .
கடந்த ஜூன் மாதம் கொரோனா வைரஸில் டெல்டா வைரஸால்தான் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர், அதன்பின் இப்போது ஒமிக்ரோனால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிவரை கரோனா தொற்றில் 99.5சதவீதம் டெல்டாவாகத்தான் இருந்தது.
நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் மருத்துவர் ரோச்செல் வெலன்ஸ்கி கூறுகையில், “அமெரிக்காவில் இருப்பதைப் போலவே மற்ற நாடுகளிலும் ஒமிக்ரோன் தொற்றால் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமிக்ரோனால் தொற்று வேகமாகப் பரவும் என்பதில் வியப்பேதும் இல்லை. கடந்த நவம்பர் 26ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் அடுத்த ஒரு மாதத்துக்குள் 90 நாடுகளுக்கும் அதிகமாகப் பரவிவிட்டது.
ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு இருக்குமா, பாதிப்பு குறைந்திருக்குமா என்பது யாருக்கும் தெரியாது.அதற்கான புள்ளிவிவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், 2 தடுப்பூசிக்கு மேல், பூஸ்டர் செலுத்துவது ஓரளவு பாதுகாப்பு அளிக்கும் என முதல்கட்ட ஆய்வில் தெரிவந்துள்ளது. கொரோனாவில் பாதிப்பு தீவிரமடையாமல் இருக்க தடுப்பூசி மிக முக்கியம்” எனத் தெரிவித்தார்.