சீனாவில் மீளவும் ஊரடங்கு

(UTV |  சீனா) – கொரோனா வைரஸ் முதல் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. அதன்பின் உலகம் முழு வதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 3 மாதத்துக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் சியான் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அந்த நகரில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் சீனாவில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஹெனான் மாகாணம் யூசவ் நகரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதை அடுத்து 1¼ கோடிக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்த நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பொது போக்குவரத்தான பஸ் மற்றும் டாக்சி சேவைகளை நிறுத்தவும், வணிக வளாகங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்களை மூடவும் உத்தர விடப்பட்டுள்ளது.

அனைத்து குடிமக்களும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைத்து சமூகங்களும் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு உள்ள சியான் நகரில் புதிதாக 95 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் கொரோனா பாதிப்பே இல்லாத நிலையைகொண்டு வரவேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு வைரஸ் பாதிப்பு ஏற்படும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *