உயிர்த்த ஞாயிறு தாக்குததாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்

(UTV | கொழும்பு) – அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளியிட்டுள்ளார் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். .

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்துக் கொண்டாடப்படும் உயிர்த்த ஞாயிறு பண்டிகை, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு உன்னதமான மத பண்டிகையாகும்.

உயிர்த்த ஞாயிறு பண்டிகையானது உள்ளத்தின் இருள் அகற்றி, நம்பிக்கையை வெளிக்கொணர்ந்து, வாழ்க்கையின் மாற்றத்திற்கு கிறிஸ்துவின் வல்லமையை உலகிற்கு வெளிப்படுத்துகின்றது. அது நம்பிக்கை மற்றும் விடுதலை மூலம் உலக இருள் மற்றும் விரக்தியை போக்க இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த செய்தியை நினைவுகூர்வதற்கு அனைவரையும் அழைக்கிறது.

நம்பிக்கையின் உதவியால் நாம் அவநம்பிக்கையையும் நிச்சயமற்ற தன்மையையும் கடந்து முழு உலகத்திற்கும் அன்பையும் இரக்கத்தையும் காட்ட வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்துவின் சிறந்த போதனைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. உயிர்த்த ஞாயிறின் இந்தச் செய்தி நம் வாழ்வின் இருண்ட மற்றும் நம்பிக்கையற்ற தருணங்களில் கூட நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறது. உயிர்த்த ஞாயிறு, நேர்மறை மற்றும் ஆன்மீக பலம், நம் வாழ்விலும் உலகத்திலும் நம்பிக்கையின்மை மற்றும் பாவத்தின் இருளால் ஏற்படும் சவால்களை வெற்றிகொள்ள நம் அனைவருக்கும் சக்தியை தருகின்றது.

நமது மதங்களினால் பயிற்றுவிக்கப்படும் ஆன்மீக ஒழுக்கம், கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் உலகளாவிய தொற்றுநோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் இந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு பண்டிகையை வழமைபோன்று கொண்டாட முடியும் என்பது எனது நம்பிக்கை ஆகும்.

எவ்வாறாயினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சோகமான அனுபவம் இன்னும் நம் மனதில் நீங்காமல் இருக்கின்றது. எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மற்றும் முறையான விசாரணைகள் மூலம் நீதியை நிலைநாட்டுவதற்கும், தாக்குதலுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *