ஜனாதிபதி மின்துறை நிபுணர்களின் ஆதரவை கோருகிறார்

(UTV | கொழும்பு) – தேசிய மின் கட்டமைப்பிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மின்துறை நிபுணர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மொத்த மின் தேவையில் 70 சதவீதத்தை உற்பத்தி செய்ய அரசு இலக்கு வைத்துள்ளது.

தற்போது சூரிய ஒளி மூலம் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களின் எதிர்ப்பின் காரணமாக சூரிய சக்தியானது அதிகபட்சமாக பயன்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களுக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்த ஜனாதிபதி, மின்சார நெருக்கடியை நடைமுறையில் சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மின் உற்பத்தித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து ஜனாதிபதி அவர்கள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பெட்ரோல் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.100 ஆகவும், நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.50க்கு மேல் செலவாகிறது என்றும் தெரியவந்தது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் வருடாந்தம் 300 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சேமிக்க முடியும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார்.

இதற்கிடையில், அனல் மின்சாரம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மாதாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவாகும் என தெரிவித்த மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தற்போதைய விலையில் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது கடினமான பணி எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *