‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை

(UTV | கொழும்பு) –

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண பங்களிப்புடனும் ஆலோசனையுடனும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றில் இன்று (06) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாடு நாசமடைவதற்கு அரசியல்வாதிகளும் குறிப்பாக, ஆட்சிக் கதிரையில் அமர்வதற்காக மக்களை தமது தேவைக்கேற்ப உசுப்பேத்தி, இனவாதத்தையும் மதவாதத்தையும் அவர்களுக்கு ஊட்டி, அதன்மூலம் நாட்டைக் குட்டிச்சுவராக்கியவர்களுமே காரணமாகும். இதனால் இந்த நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டு, மிகவும் துன்பகரமான ஒரு காலகட்டத்தில் நாம் இருந்துகொண்டிருக்கின்றோம்.
VIDEO 

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையானது, காலத்தின் தேவையாகவும் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருப்பதையிட்டு எனது நன்றியை தெரிவிக்கின்றேன். தேவையான நேரத்தில் தேவையான ஒன்றை கொண்டுவந்திருந்தாலும் அதனை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துவதன் மூலமே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கும்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைக்கப்பட்ட குழுவினரின் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையொன்று, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் அதன் பிரதிகள் முஸ்லிம் பாராளுமன்ற உருப்பினர்களான எமக்கும் நீதி அமைச்சரினால் வழங்கப்பட்டிருந்தது. குறித்த ஆலோசனைகளில் அடங்கிய பல விடயங்களுடன் எம்மால் உடன்பட முடியாதிருக்கின்றது.
உதரணமாக ‘Muslim’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘persons professing Islam’ என்ற சொற்பிரயோகம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று, ‘Nikah ceremony’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘Solemnization’ என்ற சொற்பிரயோகமானது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை காலமும் இருந்த ‘வலி’ (தந்தை, தந்தை சார்ந்த சகோதரன் அல்லது தாயுடைய சகோதரன்) நீக்கப்பட்டு, பெண் விரும்புகின்ற ஒருவர் வலியாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல விடயங்களில் நாங்கள் உன்பாடு இல்லாதது குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினோம். இதனை செவிமடுத்த அவர், நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி, உங்களது பொதுவான திருத்தங்களையும் ஆலோசனைகளையும் முன்வையுங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறினார். எனினும், தொடர்ந்தும் இதனை காலம்தாழ்த்த முடியாதெனவும் கூறினார்.
அதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் பௌசி தலைமையில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவையும் அழைத்து, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் கலந்துரையாடலில் ஈடுபாட்டோம். இந்த விடயங்களை இஸ்லாமிய ஷரீஆவை அடிப்படையாக வைத்து ஆலோசித்தோம். ஏனெனில், இஸ்லாம் இறுதியாக நபி (ஸல்) அவர்களின் மூலம் பூரணப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம். இதில் நெளிவுசுழிவுகள் கிடையாது. ஒரு சிலர் வேறு நாடுகளை சுட்டிக்காட்டி சிலவற்றை கூறுகின்றார்கள். அவ்வாறு, இஸ்லாத்தில் செய்ய முடியாது.
நமது நாட்டில் சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட உலமாக்களைக் கொண்ட, அனைத்து முஸ்லிம்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்க அமைப்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா. பல்வேறு கொள்கைகளைச் சார்ந்தவர்கள் இவ்வமைப்பில் இருந்தாலும் ‘சூரா’ அடிப்படையில் மேற்கொள்ளும் ஏகோபித்த தீர்மானத்தை அனைத்து முஸ்லிம்களும் அங்கீகரிக்கின்றனர்.
அந்தவகையில், ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து மேற்கொண்ட திருத்தங்கள் அடங்கிய ஆலோசனைகளை, பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் கையொப்பமிட்டு, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான திருத்தம் ஒன்றை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் இன்று கையளித்தோம். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 முஸ்லிம் எம்.பிக்களில் 18 பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள், முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மக்களின் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்தவகையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளையும் அவர்கள் ஜம்இய்யத்துல் உலமாவின் அனுசரணையுடன் தங்களிடம் கையளித்த திருத்தத்தையும் கருத்திற்கெடுத்து, நியாயமாக செயற்படுங்கள் என இந்த சபையில் வேண்டிக்கொள்கின்றேன்.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கொண்டுவர முயற்சிக்கப்படும் இந்தத் திருத்தம், இஸ்லாத்துக்கு எதிரான ஏஜென்டுகளினால் உத்வேகப்படுத்தப்படுகின்றது. இவர்கள் பெண்களின் உரிமையை இஸ்லாம் மறுக்கிறது என்ற பிரச்சாரங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். ஆனால், இஸ்லாம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது.
இஸ்லாமியப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் மிளிருகின்றனர். எனினும், இஸ்லாமிய ஷரீஆவில் ஆண்கள், பெண்கள் தொடர்பில் ஓர் வரையறை உண்டு. இதனை புரிந்துகொண்டு நீதியான முடிவை மேற்கொள்ளுமாறும் அதனை செயற்படுத்தமாறும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *