(UTV | கொழும்பு) –
முஹம்மது ஹம்தி எனும் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
செயலிழந்த சிறுநீரகத்துடன் பிறப்பிலேயே மற்றைய சிறுநீரகம் ஒட்டியிருந்ததாலேயே மற்றைய சிறுநீரகமும் செயலிழந்திருக்கும் என நான் எண்ணுகிறேன். அதன் காரணமாகவே செயலிழந்த சிறுநீரகத்தை அகற்றும்போது மற்றைய சிறுநீரகமும் நீக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் சிறுவனின் பெற்றோரிடமிருந்து எனக்கு எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை.
மேலும், சத்திர சிகிச்சை மேற்கொண்டு 7 மாதங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இருப்பினும், அதன் பின்னர் சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் பிரதிப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இதேவேளை, பக்கச்சார்பற்ற விசாரணைகள் மூலம் சிறுவன் தொடர்பில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வெளிக்கொணரப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பில் கூறுகையில்,
இவை தனித்து எடுத்த தீர்மானங்கள் அல்ல. சிறுவர் நோய் விசேட நிபுணர்கள், சிறுநீரகம் தொடர்பான நிபுணர்கள், கதிரியக்கவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளார்கள்.
மருத்துவ அறிக்கைகளுக்கு ஏற்ப அனைவரும் இணைந்தே இந்த தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
எனினும், பக்கச்சார்பற்ற விசாரணைகள் மூலம் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வெளிக்கொணரப்பட வேண்டும். சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை இல்லாமல் செய்ய சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්