ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்த்த மனோ – காரணம் வெளியானது

(UTV | கொழும்பு) –

முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துக்கொள்ள செல்கின்ற கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இருக்க போவதில்லை என்பதால், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறுவதாக சொல்லப்பட்ட கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள முடியாமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் நேரடியாக தெரிவித்து விட்டேன்.

அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அடுத்த வாரம் உசிதமான ஒரு தினத்தில் சந்திப்போம் என்று என்னிடம் நேரடியாக பதிலளித்து விட்டார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு சாத்தியமான தீர்வுகளை நேர்மையாக தேடும் அதேவேளை, மலையக தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் பிரத்தியேகமாக அனைத்து மலையக எம்பிக்களையும் சந்திக்கும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியே பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, அறிமுகமில்லாத ஒரு புதிய தலைவர் அல்ல. அத்துடன் இன்றைய ஒரே நாள் சந்திப்பில் மலையகத்தின் 200 வருட பிரச்சினைகளும் தீர்வுக்கு வந்து விடும் என்றும் எவரும் விளையாட்டாககூட எதிர்பார்க்க முடியாது. ஆகவே தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று நடைபெற இருந்த எமது சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு விட்டார். அத்துடன் அந்த பிரச்சினை முடிந்தது.

நேற்று பாராளுமன்றத்தில் நாம் கொண்டு வந்த மலையகம் – 200 முழுநாள் விவாதத்தில் கலந்துக்கொண்ட எதிர்தரப்பு, ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் மலையக மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என மிக உறுதியாக கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒரு மிக சாதகமான சூழலையும், புதிய பல எதிர்பார்ப்புகளையும் உருவாகியுள்ளது.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பரந்துப்பட்ட நிகழ்ச்சி நிரல் கொண்ட கலந்துரையாடலை நடத்தவே நாம் விரும்புகிறோம். மலையகத்தில் வீடு கட்டி வாழவும், வாழ்வாதார தொழிலுக்குமான காணி உரிமை, பெருந்தோட்ட குடியிருப்புகளை அரச பொதுநிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு வருவது, இந்திய அரசு உறுதியளித்துள்ள இலங்கை ரூ. 300 கோடி நன்கொடை பயன்பாட்டு திட்டம், நிலவரம்பற்ற சமூக சபை என்ற மலையக மக்களுக்கான அதிகார பகிர்வு, பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையிலான நீண்டகால குத்தகை ஒப்பந்தம் மீளாய்வு ஆகியவை பற்றி பேச கூட்டணி விரும்புகிறது. இதுபற்றி நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிக்க உள்ளோம்.

அந்த அதிகாரபூர்வ கலந்துரையாடலில், அனைத்து மலையக பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகள் கலந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். மற்றபடி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திப்பது சர்வகட்சி மாநாடு அல்ல. அது அது எமக்கு தொடர்பற்ற அரசாங்க உள்விவகாரம்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *