காஸா போர் நிறைவா? பிரான்ஸ் ஜனாதிபதியின் அழுத்தம்

(UTV | கொழும்பு) –

காஸாவின் ஹமாஸ் படையினருக்கு எதிரான போரில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.

காஸா மக்களுக்கு உதவுவது, ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாரீஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜோர்டான், எகிப்து, மேற்கு மற்றும் அரபு நாடுகள், வளைகுடா நாடுகள், ஐக்கிய நாடுகள் அவை, அரசு சாரா சர்வதேச அமைப்புகள் இணைந்து காஸாவிற்கு உதவுவது குறித்தும், போர் நிறுத்தம் குறித்தும் நேற்று (9) ஆலோசனை நடத்தின.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் காஸா மக்களைக் காக்க வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகளை காஸாவிற்குள் இடையூறு இல்லாமல் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில், பேசிய இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில்,

”அனைத்து மக்களின் வாழ்வும் சமமான மதிப்பு கொண்டது. பலஸ்தீன மக்கள் சந்தித்துவரும் இன்னல்களுக்கு ஹமாஸ் படை பொறுப்பேற்க வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரை விதிமுறைகளுக்கு புறம்பாக செய்துமுடிக்க முடியாது. தீவிரவாதத்தின் விளைவுகள் நாம் அனைவருக்கும் சமமானது.

இருதரப்புக்கும் தீர்வு கிடைக்கும் வகையில், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியைக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிழைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்படும் இழப்புகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டார்.

இதில் கருத்து தெரிவித்த பலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே, ”இஸ்ரேல் செய்துகொண்டிருப்பது ஹமாஸுக்கு எதிரான போர் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த பலஸ்தீனத்துக்கு எதிரான போராக உள்ளது. போர் முடிவை எட்ட இன்னும் எத்தனை பலஸ்தீன மக்கள் கொல்லப்படுவார்கள்?. சர்வதேச அமைப்புகள் இணைந்து உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *