விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித

 

என்னை திருடன் என்று குறிப்பிட்டு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்.போலியான குற்றச்சாட்டுக்களினால் எனது அரசியல் பயணத்தை பலவீனப்படுத்த முடியாது என கோப் குழுவின் தலைவர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ‘ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் குறிப்பிடுகிறது.ஆனால் உண்மையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் கோப் குழுவின் தலைவர் பதவிக்கு திருடர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் குற்றச்சாட்டை மேற்கோள்காட்டி கோப் குழுவின் தலைவர் ரோஹித அபேகுணவர்தன சனிக்கிழமை (16) கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தி பின்வருமாறு குறிப்பிட்டார்.

 

கோப் குழுவின் தலைவராக நான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டேன்.இந்த நியமனம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் என்னை திருடன் என்று விமர்சித்துள்ளார்.எதை திருடினேன்,எங்கு திருடினேன் என்பதை அவர் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். ஆகவே இவரது பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.

 

தங்க சங்கிலி அறுப்பு விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்திலும் விசேட உரையாற்றியுள்ளேன்.எந்த பொலிஸ் நிலையத்திலும் என்மீது முறைப்பாடுகள் ஏதும் இல்லை என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

 

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும்,வெறுப்புக்களை தூண்டி விடுவதும் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கொள்கையாக காணப்படுகிறது.பொய்யான குற்றச்சாட்டுக்களினால் எனது அரசியல் பயணத்தை பலவீனப்படுத்த முடியாது. எமது கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் தாமரை.அந்த தாமரை சேற்றில் தான் மலர்கிறது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *