குளிக்ச்சென்ற புத்தள நபர் ஜனாஸாவாக மீட்பு!

புத்தளம் – மீ ஓயா ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​

புத்தளம், எருக்கலம்பிட்டி (நாகவில்லு) பகுதியைச் சேர்ந்த அபுல் ஹூதா முஹம்மது அப்சிர் ( வயது 38) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா நிமித்தம் தனது நண்பர்களுடன் மீ ஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த நண்பர்கள் குறித்த நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் , உயிரிழந்த நபரின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.

அத்துடன், பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பளித்து சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விடுமுறை நாட்களில் புதிதாக தனது நண்பர்களுடன், குடும்பத்தினருடன் குளங்கள், ஆறுகளுக்கு சுற்றுலா செல்வோர் அந்தப்பகுதியிலுள்ள மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, குளிக்கும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என  புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *