மஹிந்தானந்தா- குணதிலக்க MP இடையில் மோதல்: ஒருவர் படுகாயம்

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவிற்கும் மஹிந்தானந்த அளுத்கமவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சம்பவத்தை சமரசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கூட்டம் முடிந்து வௌியேறும் போது மஹிந்தானந்த அளுத்கம மற்றும் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் மாடிப்படியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மாடிப்படியில் இருந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சகோதர ஊடகமொன்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு, பதிலளித்த அவர், குணதிலக ராஜபக்சவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், எனினும், அவரை தள்ள முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, அவ்விடத்திற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவர் தவறி விழுந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *