பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்!

இலங்கையின் சிங்கள திரைப்பட நடிகையான பியூமி ஹன்சமாலியின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு  கொழும்பு மாளிகாகந்த நீதவான் மஞ்சுள திலகரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சஞ்சய் மஹவத்த தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பணமோசடிச் சட்டத்தின் 6 ஆம் இலக்கத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்வைத்த உண்மைகளைப் பரிசீலித்த நீதவான் குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜகருணா மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் தரங்க லக்மால் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகிய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தனியார் குடியிருப்பில் 148 மில்லியன் ரூபாய் பெறுமதியான குடியிருப்பை வாங்கியமை, அதிசொகுசு வாகனங்களை கொள்முதல் செய்தமை, மற்றும், எட்டு வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை வைப்பு செய்துள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை வெளிப்படுத்தாத வகையில் சம்பாதித்ததாக பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பாவித்த அதி சொகுசு வாகனமொன்றை இவர் பாவித்து வரும் சர்ச்சை அண்மையில் எழும்பியதும் குறிப்பிடத்தக்கது.