சமூகத்தினதும் நாட்டினதும் நன்மை கருதி மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நமது சமூகமும், நாடும் எதிர்பார்க்கும் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார்.
விரும்பியோ, விரும்பாமலோ முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியை ஆதரிக்கும் முடிவை எடுத்து அவருடன் இணைந்து கொள்ள வேண்டும்.
இனவாதமில்லாத ஒரு தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லோராலும் மதிக்கப்படுகிறார்.
சமூகம் பாதிக்கப்பட்டு தனிப்பட்ட நபர்கள் நன்மையடையும் தீர்மானத்தை ரிஷாட் பதியுதீனும் மக்கள் காங்கிரஸ் கட்சியும் எடுக்கக் கூடாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைவலுவான நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்ல மாவட்டங்களின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபா பணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.
இவ்வாறு நாட்டை மீட்ட தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமையாகும்.
காலத்தை நாம் கடக்க முடியாது. காலம் நம்மைக் கடந்து விடும். அதனால் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும்
தீர்மானத்தை விரைவாக எடுத்து அவருடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன, மத, மொழி, கட்சி வேறு பாடுகளை கடந்து ஒரே தேசமாக நாட்டை வெற்றிக் கொள்ள ஜனா திபதி ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடையச் செய்ய அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என அவர் தெரிவித்தார்.
-எஸ்.எம். அறூஸ்