பிரதான நான்கு வேட்பாளர்களின் நூறு தேர்தல் பிரசார கூட்டங்கள்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர் 15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நாடெங்கினும் 100 பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ஆம் திகதி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை குருணாகலில் இருந்தும், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பிரசார கூட்டத்தை 17 ஆம் திகதி அநுராதபுரத்திலிருந்தும் , தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க 17 ஆம் திகதி தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை அம்பாந்தோட்டையிலிருந்தும், பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை 21 ஆம் திகதி அநுராதபுரத்திலிருந்தும் ஆரம்பிக்கவுள்ளனர்.

மேற்படி நான்கு வேட்பாளர்களும் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 100 பிரசார கூட்டங்களிலும் பேரணிகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ரணில்  விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள பணிகள்  குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுக்கு  உறுதியளிக்கப்பட்ட கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்த இலங்கை உத்தேசித்துள்ளது என்பது குறித்தே  ஜனாதிபதியின் பிரசாரம் முக்கியமாக கவனம் செலுத்தும் என அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2022 இல் வேறு எந்த கட்சித்தலைவரும் நாட்டை இக்கட்டிலிருந்து மீட்க, சவாலை ஏற்றுக் கொள்ளாதபோது, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவர் எவ்வாறு  அடியெடுத்து வைத்தார் என்பதையும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பொருளாதார ஸ்திரத்தன்மையை அவர் எவ்வாறு கொண்டு வருவார் என்பது பற்றியதாகவே அவரது பிரசாரங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவின் அணி 120 தேர்தல் பிரசாரக் கூட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  அதன் முதல் பேரணி ஓகஸ்ட் 16 ஆம் திகதி குருநாகலிலும் பின்னர் மறுநாள்  17 அன்று மாத்தறையிலும் நடத்தப்பட  திட்டமிடப்பட்டுள்ளது.

சஜித்தின் பிரசாரங்கள்  வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான வேலைத்திட்டத்தை கட்டியெழுப்புதலை அடிப்படையாகக்கொண்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் பிரதானமாக ஊழலை ஒழிப்பதற்கான திட்டங்களை முன்வைக்கும் அதே வேளை ஊழல் ஒழிக்கப்பட்டால் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஓங்கும் என்ற அடிப்படையிலும் தனது பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முதன் முறையாக  ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்சவும் நாடு முழுவதும் நூறு பிரசார கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கு பற்றவுள்ளார். தனது முதல் பேரணியை எதிர்வரும் 21 ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பிக்கின்றார்.

ஜனாதிபதி வேட்பாளர்களில் வயது குறைந்த வேட்பாளர் என்பதால் அவரது பிரசார யுக்திகள் இளையோரை இலக்கு வைப்பதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இளையோர் வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் தொழில்நுட்ப வசதிகள், தொழில்முனைவோருக்கு வாய்ப்புகள், தேசிய நலன்கள் குறித்து அவர் பிரசாரங்களை முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *