(UDHAYAM, COLOMBO) – ஆண், பெண், இன, மத, மொழி, படித்தவர், படிக்காதவர் மற்றும் பணக்கார, வறியவர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வாக்குரிமை பொதுவானதே என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு மக்களை விழிப்பூட்டும் ஊர்வலம் மற்றும் விசேட நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேர்தல் திணைக்களத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் இந்த நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்ற வீதி நாடகம், விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி வழிப்பூட்டும் ஊர்வலம் மட்டக்களப்பு நகர வீதி ஊடாக மணிக்கூட்டுக்கோபுரம், காந்திப்பூங்கா, வழியாக, மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகம் வரை சென்றது. அதன் பின்னர் பிரதான நிகழ்வுகள் மண்முனை வடக்கு பிரதேச செலயகத்தில் அமைந்துள்ள டேர்பா மண்டபத்தில் நடைபெற்றன.
இந்த வாக்காளர் தின நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
1967ம் ஆண்டு தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் உதவித்தேர்தல்கள் ஆணையாளராக கடமையாற்றிய ஒஸ்ரின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக தற்போது கடமையேற்பதனையிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு மகிழ்ச்சியடைவதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
18 வயதான ஒவ்வொருவரும் தமது உரிமையை பெற்றுக் கொள்ளவேண்டும். கட்டாயமாகக்கிடைக்கின்ற மரணத்தினை நாம் விரும்புவதில்லை. ஆனால் வாக்கினை விரும்புகிறோம். வாக்கின் மூலம் சரியான தலைவர்களை உருவாக்கினால் நாம் வள்ளம் மூலம் அவுஸ்திரேலியா செல்லத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
வாக்குப் புத்தகத்தில் பெயரிருந்தால் வாக்களிக்முடியும். இல்லாவிட்டார் வாக்கில்லை. நல்ல அபிவிருத்தி, சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்குக்கூட வாக்கு முக்கியம் பெறுகிறது என்று இதன்போது அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறவில்லை என்று மக்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பேசுகின்றனர். ஆனால் தேர்தலை நடத்துகின்ற அதிகாரம் மாத்திரமே எம்மிடமுள்ளது. அதற்கான அனுமதி , அதிகாரங்களை பாராளுமன்றம் தான் தரவேண்டும்.
உதாரணமாக கிரிக்கட் போட்டியை நடத்துவதற்கான மைதான, வீரர்கள், வசதிகள் இருந்தாலும், அதற்கு ஐ.சீ.சீ. அனுமதி தரவேண்டும் இல்லையானால் போட்டியை நடத்த முடியாது. அது போலத்தான் எமது நிலைமை என்று சுட்டிக்காட்டினார்.
உள்ளுராட்சித் தேர்தல்களைப் பொறுது;தவரையில், உள்ளுராட்சித் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிற போதுதான் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தமுடியும். விரைவில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானமும் இதில் முக்கியமானது.
தேர்தலில் தமது வாக்கு மூலம் அரசியல்வாதி ஒருவரைத் தெரிவு செய்வதுடன் எமது கடமை முடிந்தது என்று மக்;கள் நினைத்துவிடமுடியாது. தேர்தல்கள் நடத்தப்படவில்லையானால் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் வாக்காளர்தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் , மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமை தொடர்பான ஆவணம் தேர்தல்கள் ஆணையாளரிடம் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்தினாளிகள் சம்மேளத்தினால் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்.ரத்னஜீவன் எச்.கூல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.