(UDHAYAM, COLOMBO) – புற்றுநோய் சிகிச்சைக்காக ரஷ்யாவில் இருந்து தருவிக்கப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் எதுவித பிரச்சினையும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் வீல்பிரட் குமாரசிறி தெரிவித்தார். கடந்த 9 மாத காலப் பகுதியில் பெருமளவு நோயாளிகள் ரஷ்ய புற்றுநோய் மருந்தைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
அதேவேளை, தொற்றுநோய்களுடன் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பற்றிய சகல தகவல்களையும் சுகாதார அமைச்சிற்கு வழங்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதிகாரிகளைப் பணித்துள்ளார நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள தெரிவிக்கப்பட்டன.
இது தொடர்பில் தனியார் மருத்துவமனை ஒழுங்குறுத்தல் அமைப்பின் ஊடாக சகல தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறையின் மூலம் புதிய நுண்ணுயிர்களைக் கண்டறிந்து, முறையான சிகிச்சைகளைத் தொடங்கி, நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம் என சுகாதார அமைச்சர் கூறினார்.