அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைக்கு ஈரான் அதிருப்தி

(UTV |  ஈரான்) – ஈரான் இராணுவம் மீது அமெரிக்கக் கருவூலத்துறை புதிதாக மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில், “சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது 2019ஆம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் இராணுவம் நடத்தியது. 2021ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி ஓமன் கடற்கரையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனத்தால் இயக்கப்படும் மெர்சர் ஸ்ட்ரீட் வணிகக் கப்பலின் மீதும் (இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியிலிருந்த இருவர் கொல்லப்பட்டனர்) ஈரான் இராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

மேலும் ஈரானின் ட்ரோன்கள், ஹமாஸ், ஹவுத்தி போன்ற கிளர்ச்சியாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, ஈரான் இராணுவ ட்ரோன் பிரிவின் மீதும், ஈரான் இராணுவத்தின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைவர் அகாஜானி மீதும் புதிதாகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் புதிய பொருளாதாரத் தடையால் ஈரான் அதிருப்தி அடைந்துள்ளது.

அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது பதவிக் காலத்தில் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.

இந்நிலையில் டெஹ்ரானுக்குத் தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *