கலிபோர்னியாவில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

(UTV |  லாஸ்ஏஞ்சல்ஸ்) – அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிளாமிஸ் பகுதி அருகே பறந்து சென்ற ராணுவ விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.

இதில் அந்த விமானம் நொறுங்கியது. உடனே அங்கு மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் மெக்சிகோ எல்லையில் 35 கிலோமீட்டர் தூரத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, கடற்படைக்கு சொந்தமான ஒரு விமானம் கிளாமிஸ் பகுதியில் விபத்தில் சிக்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் முதலில் தகவல் தெரிவித்தனர்.

விமானத்தில் அணுசக்தி பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திகள் ஆகும் என்றார். இந்த விமான விபத்தில் உயிரிழப்பு, சேதம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் நார்வேயில் அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *