“இந்நாட்டுக்கு ராஜபக்சவின் அரசியல் தேவை”

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ராஜபக்சவின் அரசியலுடன் முன்னோக்கி நகர்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் ராஜபக்சவின் அரசியலே நாட்டிற்கும் கட்சிக்கும் பலமாகும்.

“.. இந்த நாட்டின் பலமும் எமது கட்சியின் பலமும் ராஜபக்சவின் அரசியல் பலமே. எனவே இக்கட்சியை ராஜபக்சவின் அரசியலுடன் முன்னெடுத்துச் செல்வோம் என்பதை கட்சி என்ற ரீதியில் தைரியமாக கூறுகின்றோம்..”

ராஜபக்ச மீண்டும் பதவிக்கு வருவாரா என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுச் செயலாளரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கட்சியின் பொதுச் செயலாளர்.

“ராஜபக்ஷக்கள் அந்தப் பதவிகளை விட்டுச் சென்றது தவறு என்பதே எனது தனிப்பட்ட கருத்தும் எமது கட்சியின் பெரும்பான்மையினரின் கருத்துமாகும். இந்நாட்டின் 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர், அந்த ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் உரிமை 69 இலட்சம் மக்களுக்கு உள்ளது, வீதியில் இறங்கிய வெறும் ஒரு இலட்சம் மக்களுக்கு அல்ல. ராஜபக்சர்கள் இந்த நாட்டுக்கு மக்கள் வாக்கு மூலம் வந்தவர்கள், பலவந்தமாக ஆட்சிக்கு வரவில்லை. எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. இன்றும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சவின் தேசிய அரசியல் நாட்டுக்கு தேவை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்..”

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இனி அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என கட்சியின் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் அவரை சந்தித்தோம். அவர் எங்களுடன் எந்த அரசியலையும் பேசவில்லை. வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து பேசினார். இனி அரசியலில் அவருக்கு எந்த வகையிலும் விருப்பமில்லை..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *