ஹரின், மனுஷவின் அர்ப்பணிப்பே நாடு பங்களாதேஷின் நிலைக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் அர்ப்பணிப்பு காரணமாகவே நாடு பங்களாதேஷின் நிலைக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஷல ஜாகொட தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை  (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டம் காரணமாக அந்த நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. நடுவீதியில் வழக்கு விசாரணை செய்து, தூக்குத்தண்டனை வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அங்கு சட்டம் ஒழுங்கு முற்றாக பாதிக்கப்பட்டு ஜனநாயகம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஹரின் மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் அர்ப்பணிப்பினாலே அவ்வாறானதொரு நிலை எமது நாட்டில் இடம்பெறாமல் தடுக்கப்பட்டது.

அன்று நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தின்போது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். அதேநேரம் முழு அமைச்சரவையும் பதவி விலகியிருந்தது.

அவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்க இவர்கள் இருவருமே ஆரம்பமாக முன்வந்தனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அன்று இவர்கள் இருவரும் முன்வராவிட்டால், இன்று பங்களாதேஷுக்கு ஏற்பட்டுள்ள நிலையே எமது நாட்டுக்கும் ஏற்பட்டிருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிய சிரமத்துக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை தற்போது கட்டியெழுப்பி வருகிறார். இந்த பயணம் இடை நடுவில் கைவிடப்பட்டால், நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கே செல்லும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவதற்கு நாட்டு மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.

அதனால்தான் அதிகமான கட்சிகள், அமைப்புகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றன. எதிர்வரும் தினங்களில் இன்னும் பலர் எம்முடன் இணைய இருக்கின்றனர். அதனால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

அதேபோன்று நாட்டை ஆட்சி செய்து அனுபவமில்லாத சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ் உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரும் இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாகப்போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளது என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *