ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து பாராளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல் கலாசாரத்தின் விளைவுகளால் நாடு சூழப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையிலிருந்து விடுபட அனைவரும் சுதந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட்டு நாட்டை தேசியத் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒரே குழுக்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை உருவாக்கி மக்களிடம் வந்தாலும் அவர்களின் மனநிலை மாறவில்லை என்றும் அவர்கள் நாட்டைப் பற்றியோ நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியோ சிந்திப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி விகாரையில் தரிசனம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்களை நிறுத்துதல், திருடர்களுக்கு தண்டனை வழங்குதல், போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களிலிருந்து நாட்டை விடுவித்தல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், அந்நிய செலாவணி ஈட்டுதல், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் பொது போக்குவரத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருதல் என்பனவே எமது நோக்கம் என்றும் கூறினார்.